மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ‘தடையற தாக்க’ படம் 2012-ல் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. இதில் மம்தா மோகன்தாஸ், ரகுல் ப்ரீத் சிங், வம்சி கிருஷ்ணா, அருள்தாஸ், காளி வெங்கட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
திரில்லர் ஜானரில் மைல்கல்லாக இன்றளவும் இந்த படத்தை பாராட்டுகின்றனர். இந்திய அளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்த படம் தடையறத் தாக்க என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படம் அருண் விஜய் திரைவாழ்வில், மிகப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. மேலும் திரையுலகில் அவருக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும் ஏற்படுத்தி தந்தது.
இந்த படம் இயக்குநர் மகிழ் திருமேனியின் அடையாளமாக மாறி நடிகர் அஜித்தை வைத்து விடாமுயற்சி படத்தை இயக்கும் அளவிற்கான வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.
வாழ்க்கையில் கஷ்டபட்டு நல்ல நிலைக்கு முன்னேறிய இளைஞன், ஒரு சிறு உதவி செய்யபோக, மிகப்பெரிய ரௌடிகளின் கூட்டத்திடம் மாட்டிக் கொள்கிறான். அவன் அந்த ரௌடிகளிடமிருந்து தப்பினானா என்பது தான் கதை. இசையமைப்பாளர் தமனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பைக் பெற்றது.
ஒரு ஆக்சன் படத்தின் மொத்த இலக்கணங்களை மாற்றியமைத்து, ரசிகர்களை இறுதிவரை இருக்கை நுனியில் அமர வைத்த இப்படம், திரைக்கு வந்தபோதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று, ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
இப்படம் தற்போது நவீன ஏஐ தொழில் நுட்பத்தில் மெருக்கேற்றப்பட்டு, 4கே தரத்தில் நவீன அட்மாஸ் சவுண்ட் வடிவமைப்புடன், புதிய டிஜிட்டல் பதிப்பாக,அப்ஸ்விங் எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடட் நிறுவனம் புத்தம் புதிய நவீன தொழில் நுட்பத்துடன் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.






















