பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜான்விகா அழகில் மயங்கி சக மாணவர்கள் பின்னால் சுற்றுகிறார்கள். அவர்களை பொருட்படுத்தாமல் தனது லட்சியத்தை நோக்கி செல்லும் ஜான்விகா ராணுவ வீரரான தனது தந்தையிடம் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகிறார். பாரம்பரியத்தை மறக்காமல் விவசாயத்திலும் ஈடுபாடு காட்டுகிறார். கல்லூரி மாணவர்களை இணைத்து கிராமங்களை சுத்தம் செய்து சமூக சேவையிலும் ஆர்வம் காட்டுகிறார். எகிப்தில் ஆசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வென்று பரிசு பெறுகிறார். ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமும் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் கார்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு லாரியில் தப்பி செல்லும் குற்றவாளியை பிடிக்க போலீசுக்கு உதவுகிறார். இதனால் ஜான்விகாவுக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதில் இருந்து தப்பினாரா? ராணுவத்தில் சேர வேண்டும் என்ற அவரது கனவு நிறைவேறியதா? என்பது மீதி கதை..
ஜான்விகா கல்லூரி மாணவி, பிறர் மீது இரக்க குணம், துப்பாக்கி சுடும் வீராங்கனை, தந்தையின் கனவை நிறைவேற்ற துடிக்கும் மகள என்று பல கோணங்களில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி மனதில் நிற்கிறார். வில்லன்களுடன் மோதும் சண்டை காட்சிகளில் ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார். கல்லூரி மாணவராக வரும் கிரண் பிரதாப், ஜெய்பாலா ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
மனோபாலா, செண்ட்ராயன் கூட்டணி சிரிக்க வைக்கின்றனர். ஆடுகளம் நரேன் பாசமுள்ள தந்தையாக வருகிறார். சுதாகர் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். ராஜேஷ் இசை மற்றும் சி.வி.ஹமரா பின்னணி இசை படத்துக்கு பலம். சங்கர் செல்வராஜ் கேமரா காட்சிகளை இயல்பாக படம்பிடித்துள்ளது. திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
பெண்கள் சாதனை படைகக் வேண்டும் என்ற கருவில் அவர்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கதையம்சத்தில் தரமான படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் கலா அல்லூரி. ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.






















