செங்காடு மலைப்பகுதிக்கு மாற்றலாகி வரும என்கவுண்டர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இசக்கி கார்வண்ணன் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகாது இருப்பதை பார்த்து வியக்கிறார். அந்த பகுதி குழந்தைகளுக்கு அபிநட்சத்திரா படிப்பு சொல்லி கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் அந்த ஊருக்கு ஆசிரியராக வருபவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். கொலையை விசாரிக்கும் இசக்கி கார்வண்ணனுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார் என்பதை இசக்கி கார்வண்ணன் கண்டுபிடித்தாரா? என்பது மீதி கதை..
போலீஸ் இன்ஸ்பெக்டராக மிடுக்காக வரும் இசக்கி கார்வண்ணன் நேர்த்தியான நடிப்பால் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்க்கிறார். அபிநட்சத்திரா தனது கேரக்டரை உள்வாங்கி தேர்ந்த நடிப்பை வழங்கி கவனிக்க வைக்கிறார். போலீசாக வரும் காதல் சுகுமார் சிரிக்க வைக்கிறார்.
போஸ்ட்மேன் சவுந்தர், பிரவீன் பழனிச்சாமி, கரண் சக்ரவர்த்தி, ஆலன் கிருஷ்ணா, சித்து குமரேசன், ஆனந்த் சவுந்தரராஜன், உதயா சுமதி, நேசன், குயிலி நாச்சியார், நிலா, சுமித்ரா தேவி, ஆஷிகா, மறைந்த செல்வகுமார் ஆகியோர் அவரவர் கேரக்டருக்கு தேவையான நடிப்பை வழங்கி உள்ளனர்.
மலை கிராமத்தில் நடக்கும் மர்மங்களை கேமரா மூலம் கண்முன் நிறுத்துகிறார் ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம். தீசன் பின்னணி இசை பலம். இயற்கை சூழ்ந்த மலைக்கிராமத்தில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மர்ம கொலைகளை திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்த்தி ரசிக்கும்படியான படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் தி.கிட்டு






















