‘பிக்பாக்கெட்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது. இந்த படத்தை விதா ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் படத்தொகுப்பாளரும் இயக்குனருமான பி.ஆர்.விஜய் தயாரிக்கிறார்.
படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ஜே.எஸ்.ஜூபேர் அக்மத் டைரக்டு செய்கிறார். இவர் ஓ.டி.டியில் வெளியாகி பிரபலமான ‘ரிவால்வர்’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் பி.ஆர்.விஜய், யோகலட்சுமி, பவன் கிஷோர், சுந்தர், அலெக்ஸ், இயன், கிறிஸ்டியன், சந்தீப், காந்திபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் ஜே.எஸ். ஜூபேர் அகமத் கூறும்போது, ‘’ஒரே நாளில் இரவு 7 மணிக்கு துவங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடையும் திரைக்கதை இது. பொதுவாக திரைப்படங்களில் செயின் பறிப்பு, தங்க கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றை வைத்து திரைக்கதை அமைத்திருப்பார்கள். ஒரு சில படங்களில் பிகபாக்கெட் பற்றி ஒரு சில காட்சிகள் மட்டுமே இருக்கும் அதை பெரிதாக யாரும் கேரி பண்ணியது கிடையாது.
ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க பிகபாக்கெட்டை மையமாக வைத்து முழு திரைக்கதை உருவாக்கி இருக்கிறேன். பிக்பாக்கெட் திருடர்களை நாம் இன்றுவரை சாதாரணமாக தான் பார்த்து வருகிறோம் அவர்களுக்கு பின்னால் ஒரு பெரிய மாஃபியா கும்பல் செயல் பட்டு கொண்டிருக்கிறது என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்கிறோம்’’ என்றார்.
இந்த படத்துக்கு பிரேம் ஒளிப்பதிவு செய்கிறார். ஷாஜகான் இசையமைக்கிறார். எடிட்டிங்:அருண்குமார், சவுண்ட் மிக்சிங்: பிரேம், டி.ஐ.ஜியாவுதீன், மக்கள் தொடர்பு:புவன் செல்வராஜ்.
பிக்பாக்கெட் படத்தின் படப்பிடிப்பு நேற்று புதுச்சேரியில் பூஜையுடன் துவங்கியது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.






















