மறைந்த நடிகர் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் ‘கொம்பு சீவி’ என்ற புதிய படத்தில் சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ளார். ஸ்டார் சினிமாஸ் முகேஷ் டி.செல்லையா தயாரித்துள்ள இந்த படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கேப்டன் என்று ரசிகர்களாலும் தொண்டர்களாலும் அழைக்கப்பட்ட விஜயகாந்த் தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளில் படக்குழுவினருக்கு அறுசுவை உணவும் புதிய உடைகளும் வழங்குவதை வழக்கமாக வைத்து இருந்தார்.
தற்போது சண்முக பாண்டியனும் சின்ன கேப்டன் என்று அழைக்கும் வகையில் தனது ‘கொம்பு சீவி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளில் படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி கவுரவித்தார்.
இதுகுறித்து சண்முகப்பாண்டியன் கூறும்போது, “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி ‘கொம்புசீவி‘ படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக உணவையும், உடைகளையும் பகிர்ந்து கொண்டேன்,” என்றார்.
கொம்பு சீவி படத்தின் இயக்குனர் பொன்ராம் ஏற்கனவே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘, ‘ரஜினி முருகன்‘, ‘சீமராஜா‘, ‘எம்ஜிஆர் மகன்‘, ‘டிஎஸ்பி‘ என ஜனரஞ்சக வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் கொம்பு சீவி படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கப்பட்டது. சென்னையில் நிறைவுற்றது. புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். சுஜித் ஷங்கர், கல்கி, முனீஷ்காந்த், காளி வெங்கட், ஜார்ஜ் மரியான் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்ய, தினேஷ் படத்தொகுப்பை கையாள, கலை இயக்கத்தை சரவண அபிராம் கவனிக்க, ஃபீனிக்ஸ் பிரபு மற்றும் சக்தி சரவணன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ஸ்டில்ஸ்: சி.எச். பாலு; நடன இயக்கம்: ஷெரிப், அசார்.
தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டியை சுற்றி இருக்கும் கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது. இயக்குநர் பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பி இருக்கும்.






















