ஜூலை 19-ல் நா.முத்துக்குமாருக்காக 8 இசையமைப்பாளர்களின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி

0
82

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடல்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த  மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50-வது பிறந்த நாளை பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக கொண்டாட திரையுலகினர் முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை திறமையாக நடத்தி வரும் ஏசிடிசி நிறுவனத்துடன் இணைந்து வருகிற ஜூலை மாதம் 19-ந்தேதி சென்னை நேரு விளையாட்டு  அரங்கில் இந்த விழாவை நடத்த உள்ளனர். 

இந்த இசை நிகழ்ச்சியில் இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி பிரகாஷ் குமார், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ் தமன், சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி, கார்த்திக் ராஜா மற்றும் நிவாஸ் கே பிரசன்னா ஆகிய 8 பேர் ஒரே மேடையில் இணைந்து இசை நிகழ்வை நடத்துகின்றனர். 

பாடகர்கள் சித்தார்த், ஆண்ட்ரியா, திப்பு, உத்தரா உன்னிகிருஷ்ணன், சைந்தவி, ஹரிணி ஆகியோர் பாட இருக்கிறார்கள்இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கமல்ஹாசன், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ரவி மோகன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ள இசைவு  தெரிவித்து உள்ளனர். 

சென்னையில் நடந்த இதன் அறிவிப்பு நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் ஆர். வி.உதயகுமார், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தனஞ்செயன்இயக்குநர் விஜய் , எழுத்தாளர்கள் பவா செல்லத்துரை, அஜயன் பாலா மற்றும் ஏசடிசி நிறுவனத்தின் சார்பாக அதன் இயக்குனர் ஹேமந்த் மற்றும் இணை இயக்குனர் சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘’நா.முத்துக்குமாரை நினைத்தாலே ஆன்ந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல்தான் நினைவுக்கு வரும். அதையே நிகழ்ச்சிக்கு டைட்டிலாக வைத்து இருப்பது பொருத்தம்.  2009-ல் கண்டேன் காதலை படத்தில் ஆரம்பித்து தெய்வத்திருமகள், தாண்டவம் என பல படங்களில் மறக்க முடியாத பாடல்களை கொடுத்து இருக்கிறார். அவர் எப்போதும் நம் மனதில் இருப்பார். அவருக்கு விழா எடுப்பது பாராட்டுக்குரியது’’ என்றார்.

இயக்குனர் ராம் பேசும்போது, ‘’நா.முத்துக்குமார் தமிழ்த் திரை இசைப் பாடல்களைக் கேட்கக்கூடிய எல்லோருடைய வீடுகளிலும் ஆனந்த யாழை மீட்டிக் கொண்டிருக்கிறார். நா.முத்துக்குமார் யாருடைய சுதந்திரத்திலும் தலையிடவும் இல்லை. நான் முதல் படம் எடுக்கக் காரணமாக இருந்தவரே முத்துக்குமார் தான். இது நா.முத்துக்குமாரை தமிழகம் முழுக்க கொண்டாடப் போகிற ஒரு விழா’’ என்றார்.

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, ‘’தமிழகம் உருவாக்கிய எத்தனையோ முத்துக்களில் அரிய முத்து நா.முத்துக்குமார். அவர் ஒரு கவிஞராக மட்டுமல்ல ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்திருக்கிறார். மற்றவர்களை மகிழ்வித்து மகிழக்கூடிய ஒரு கவிஞராக இருந்திருக்கிறார். கதையோட்டத்துடன் பாடல்களை எழுதக்கூடிய கவிஞர்கள் இப்போது இல்லை. ஆனால் ரத்தத்தோடும் உணர்வோடும் இன்று வரை வாழ்க்கையில்  எண்ணிப் பார்க்கக் கூடிய வகையில் வரிகளைத் தந்து சென்றவர்தான் நா முத்துக்குமார்என்றார்

இயக்குநர் விஜய்பேசும்போது, ‘’இந்த விழா நடப்பதற்கு மிக முக்கிய காரணமான ஏசிடிசி குழுவுக்கு நன்றி. 2016ல் நா முத்துக்குமார் மறைந்த சில நாட்கள் கழித்து இயக்குநர் செல்வமணி என்னை அழைத்து முத்துக்குமாருக்கு ஒரு நினைவு விழா எடுக்க வேண்டும் என்று கூறினார். இதை முதலில் ஆரம்பித்தது அவர்தான். இந்த நிகழ்வு பற்றி சொன்னதும் விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ் எனப் பலரும் தாங்கள் இந்த நிகழ்ச்சியில் கான்சர்ட் செய்வதாக முன்வந்தார்கள். இது ஒரு பிரம்மாண்ட விழாவாக அமையப் போகிறது. அதைக் கொண்டாடும் தருணம் இதுஎன்றார்.

பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘’நா.முத்துக்குமார் ஒரு ஞான கிறுக்கன். ஒரு கட்டத்தில் அவர் பேசுவதே பாடல் வரியாகவோ இலக்கியமாகவோ மாறியது. அவர் பாடல் எழுதிய பின்பு தான் அப்பாவின் பாசத்தை பலரும் கொண்டாட ஆரம்பித்தார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும் கூட அத்தனை இயக்குநர்களும் இந்த விழாவை நடத்துவதற்கு நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம் என்று சொல்கிறார்களே அது தான் நா.முத்துக்குமாரின் வெற்றிஇந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடப்பதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சங்கத்தின் சார்பாக அனைத்து உதவிகளையும் நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம்’’என்றார்.

இயக்குனர்கள் லிங்குசாமி, ஏசிடிசி இணை இயக்குனர் சரண் ஆகியோரும் பேசினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here