கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கும் விழா சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. விழாவில் இந்த கல்வியாண்டில் முதல், இரண்டாம் இடங்களைப் பெற்ற 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 100 பேருக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பரிசுகள் வழங்கினார். இந்த விழாவில் சென்னை Genid shipping and Logistics private Ltd M. D டாக்டர் T.ஜாண்சன், சுசீந்திரம் எஸ்.எம்.எஸ்.எம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் J.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, ‘’மாணவச் செல்வங்கள் பொக்கிஷமாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இவர்களை நிதானமாக, கவனமாக, அர்ப்பணிப்போடு ஆசிரியர்கள் கையாள வேண்டாம். ஆங்காங்கே பாலியல் அத்துமீறல்கள் நடப்பதை போக்ஸோ சட்டம் போட்டு தண்டிப்பது, தேவையான ஒன்றாக உள்ளது.
முதல்வர் விஜய் அவர்கள் மாணவச் செல்வங்களை ஒழுக்க பாதைக்கும், வளர்ச்சி பாதைக்கும் கொண்டு செல்ல வாரம் தோறும் பள்ளிகளில் நற்போதனை வகுப்புகளை கற்றறிந்த சான்றோர்களை வைத்து நடத்த வேண்டும். போதை பழக்கம், ஈவ்டீசிங், சினிமா, கிரிக்கெட் மோகம் பைக் ரேஸ் ஆகியவற்றில் இருந்து மாணவர்களை மீட்டு, சமூகத்திற்கு ஆரோக்யமான இளைய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.
கல்விசாலை என்பது யாகசாலை. கல்விக் கூடம் என்பது ரோஜா வனம் போன்றது. மாணவச் செல்வங்களை மணம் வீசும் மலர்களாக மாற்றுவது நம் கையில் தான் உள்ளது. மாணவர்கள் நெஞ்சம் நெருப்பு போன்றது. அந்த நெருப்பை தவறுக்கு அல்லாமல் சமூக வளச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் விஜய் மாற்றத்தை விரும்புபவர். எனவே, மாணவ சமுதாயத்தின் மீது முதல்வர் தனிக்கவனம் செலுத்தி பள்ளிகள் தோறும் நற்போதனை வகுப்புகளை நடத்த ஆணையிடுமாறு வேண்டுகிறேன்’’என்றார். மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்வருக்கு கடிதமும் எழுதியுள்ளார்.
விழாவில், தொழிலதிபர் டி. ஜாண்சன் பேசும்போது, ‘’எதிர்கால சமுதாயம் தவறான வழியில் திசை திரும்பி விடக்கூடாது. அதற்கு கல்வி மிகவும் முக்கியம். பி.டி.செல்வகுமார் செய்து வருவது அறப்பணியாகும். ஏற்கனவே முதல்வர் விஜய்க்காக 29 ஆண்டுகள் நல்ல பணிகளை செய்துள்ள அனுபவம் அவருக்கு உள்ளது. பள்ளிக்கூட கட்டிடங்கள், கலையரங்குகள் உள்ளிட்ட அவரது தொண்டு சிறப்பானதாக உள்ளது. அந்தவகையில் பள்ளி பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டும் வகையில் பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.
இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும், மாணவர்களுக்கு உதவிட வேண்டும் என்ற வேட்கை அவரிடம் உள்ளது. இதனால் தான் எங்களைப் போன்ற நடுநிலையாளர்கள் அவரிடம் உள்ளோம். சமத்துவப் பொங்கலாக இருந்தாலும் சரி, பள்ளி கட்டிடங்கள் திறப்பு விழாவாகட்டும் அவரது உழைப்பு பாராட்டும் வகையில் உள்ளது. இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அவரிடம் மேலோங்கி உள்ளது. நானும் ஒரு கிராமத்தில் இருந்து இந்த நிலைக்கு வந்ததற்கு காரணம் கல்விதான் எனவே, அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்’’என்றார்.
























