‘பிக்பாஸ் சீசன் 3’ வெற்றியாளரும் ‘வேலன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவரும் இசைக்கலைஞருமான முகேன் ராவ் கதையின் நாயகனாக நடித்துள்ள புதிய படம் ‘ஜின்– தி பெட்’. இதில் பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி,’நிழல்கள்‘ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட மேலும் பலர் நடித்திருக்கிறார்கள். காமெடி ஹாரர் படமாக தயாராகி உள்ளது.டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
இந்த படத்தை டி.ஆர்.பாலா இயக்கி உள்ளார். ‘ஜின்–தி பெட்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர் செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர்.அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ‘’இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன். வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது’’என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசும்போது, ’இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ–ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி‘ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்‘ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்‘. என்றார்.
இந்த படம் மே 30-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.






















