சென்னையில் சினிமா சண்டை பயிற்சியாளராக பணியாற்றிய மோகன்லால விபத்தில் நண்பன் பலியான பின்பு வாடகை கார் ஓட்டி பிழைப்பு நடத்துகிறார். தனது மனைவி ஷோபனா மற்றும் மகன், மகளுடன் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார். தான் ஓட்டும் பழைய பென்ஸ் காரை குடும்பத்தில் ஒன்றாகவே நேசிக்கிறார்.
ஒரு கட்டத்தில் கல்லூரியில் படிக்கும் தனது மகனின் நண்பர்கள் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்த கோபமாகும் மோகன்லால் மகன் கன்னத்தில் அறைந்து விடுகிறார். இதனால் மகன் மோகன்லாலுடன் பேசுவதை தவிர்த்து கல்லூரி விடுதியிலேயே தங்கி இருக்கிறான்.
இந்த நிலையில் வெளியூர் சென்று விட்டு ஊருக்கு திரும்பும் மோகன்லாலுக்கு இன்னொரு அதிர்ச்சியாக அவரது காரை மெக்கானிக் எடுத்துபபோய் கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கி தப்பி ஓடிவிடுகிறான. காரை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் பதறும் மோகன்லால் காரை ஒப்படைக்கும்படி கெஞ்சுகிறார்.
காரை மோகன்லாலிடம் திருப்பி தருவதாக சொல்லும் இன்ஸ்பெக்டர் தானும சப் இன்ஸ்பெக்டரும் ஒரு திருமணத்துக்கு செல்ல சவாரிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்துப் போகிறார். திருமண வீட்டில் இருவரும் மது அருந்துகிறார்கள்.
பின்னர் நடுகாட்டுக்குள் காரில் சென்று மோகன்லால் கார் டிக்கியில் இருந்து தங்களால் கொலை செய்யப்பட்ட ஒருவரின் பிணத்தை தூக்கிபபோய் புதைக்கின்றனர். அதை பார்த்து மோகன்லால் பதறுகிறார். கொலையுண்டவர் யார்? இதனால் மோகன்லால் வாழ்க்கையில் ஏற்படும சிக்கல்கள் என்ன? அதில் இருந்து அவரால் விடுபட முடிந்ததா? என்ற கேள்விகளுக்கு விடையாக மீதி கதை..
கார் டிரைவர பென்ஸ் கதாபாத்திரத்தில் படம் முழுக்க அசத்தல் நடிப்பை வழங்கி இருக்கிறார் மோகன்லால். மனைவி, குழந்தைகள் மீது பாசம் காட்டுவது, மகனை அடித்த குற்ற உணர்வில் வருந்துவது, மாஸ்டரிடம் விசுவாசம், காரை மீட்க போலீசிடம் கெஞ்சுவது என்று படம் முழுக்க நடிப்பில் ஆளுமை செலுத்துகிறார். ஆக்ஷனில் இன்னொரு முகம் காட்டி அதிர வைத்து கதை நகர்வை மேலும் விறுவிறுப்பாக்கி இருக்கிறார்.
சினிமா ஸ்டண்ட் மாஸ்டராக பாரதிராஜா சில காட்சிகளே வந்தாலும் ஜீவனுள்ள நடிப்பை வழங்கி உள்ளார். ஷோபனா போலீஸ் கொடுமையில் கதறி படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்து விடுகிறார்.
போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் பிரகாஷ் வர்மா வித்தியாசமான வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். இளவரசு, பினு பப்பு, பர்ஹான் பாசில், சாய்ஷோ அடில்மலி, தாமஸ் மாத்யூ, அமிர்தவர்ஷினி ஆகியோர் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு சேர்த்துள்ளனர்.
ஆரம்பத்தில் சாதாரணமாக நகரும் கதை பிறகு திருப்பங்களுடன் வேகம் எடுத்து காட்சிகளோடு பார்வையாளர்களை கட்டிப்போடுவது பலம்.
ஜேக்ஸ் பெஜாய் இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது. ஷாஜி குமார் கேமரா வனப்பகுதிகளின் அழகையும் சண்டை காட்சிகளையும் நுணுக்கமாக படம் பிடித்து திகில் கதைக்கு வலு சேர்த்துள்ளது
ஒரு கொலை பின்னணியில் நடக்கும் கதையை சஸ்பென்ஸ், திகில் என்று விறுவிறுப்பாக நகர்த்தி தரமான படைப்பாக கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தருண் மூர்த்தி.
தொடரும்…மோகன்லாலுக்கு இன்னொரு திரிஷ்யம்..




















