சியா புரொடக்ஷன்ஸ் சுபா அண்ட் சுரேஷ் ராம் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘மாண்புமிகு பறை’. இதில் திண்டுக்கல் லியோனி மகன் லியோ சிவக்குமார் நாயகனாக நடித்துள்ளார். காயத்ரி ரெமோ, கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார் டைரக்டு செய்துள்ளார். தேவா இசையமைத்துள்ளார்.
படக்குழுவினர் கூறும்போது, ‘’பறை இசையின் பெருமை சொல்லும் படமாக ‘மாண்புமிகு பறை’ உருவாகி உள்ளது. எல்லா இசையும் ஒன்று தான். ஆனால் மற்ற இசை வாத்தியங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் புகழும் மட்டும பறை இசைக்கு கிடைப்பதில்லை, அந்த பறை இசையின் பின்னணியை, வலியை,பெருமையை சொல்லும் படைப்பாக ‘மாண்புமிகு பறை’ திரைப்படம் தயாராகி உள்ளது’’என்றனர்.
இதன் படப்பிடிப்பு திருச்சி அருகே உள்ள துறையூரில் நடத்தி முடிக்கப்பட்டது.
‘மாண்புமிகு பறை’ படம் உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் 2025 சர்வதேச திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ போட்டியில் பங்கேற்று ஜூரி மெம்பர்களால் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு படைப்புகள் அனுப்பப்படும். கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு பார்க்கப்படுவது, படைப்பாளிகளுக்கு உட்சகட்ட மதிப்பாக, மிகப்பெரும் பெருமைக்குரிய விசயமாக கருதப்படுகிறது.
அந்த வகையில் இந்த வருடம் 2025 கேன்ஸ் உலகத் திரைப்பட விழாவில் தமிழ்த்திரைப்படமான ‘மாண்புமிகு பறை’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்பட்டது தமிழ் திரைத்துறைக்கே பெருமை சேர்க்கும் இந்நிகழ்வு என்று படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர். இது படக்குழுவினரை உற்சாகத்திலும் ஆழ்த்தி உள்ளது.
கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றதன் மூலம் ‘மாண்புமிகு பறை’ படத்துக்கு திரை ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்ப ஏற்பட்டு உள்ளது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. கதை, திரைக்கதை: சுபா மற்றும் சுரேஷ் ராம், ஒளிப்பதிவு: கொளஞ்சி குமார், இணை தயாரிப்பு: ஜெ.எப்.நக்கீரன், மற்றும் கவிதா



















