தமிழ் திரையுலகின் பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம். இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்கள் படங்களிலும் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார். குறிப்பாக விஜய்யின் பல படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி இருக்கிறார். முன்னாள் முதல்வர்கள மு.கருணாநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களிடமிருந்து நிறைய விருதுகளும் பெற்று இருக்கிறார். தற்போது கில்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
இந்த நிலையில் முதல் அமைச்சராக பதவி ஏற்றுள்ள விஜய்க்கு ஜாகுவார் தங்கம் நெகிழ்ச்சியோடு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து ஜாகுவார் தங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘’தமிழக முதலமைச்சராக பதவியேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் சரித்திர நாயகன் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துக்கள். சட்டம் ஒரு இருட்டறை படத்தில் உங்களை குழந்தை நட்சத்திரமாக பார்த்தது முதல் இன்று தமிழகத்தின் முதல்வராக பார்க்கும் போது எனது உள்ளம் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.
33 ஆண்டுகள் கதையின் நாயகனாக அரிதாரம் பூசி இருந்த நீங்கள் இன்று தமிழகத்தின் முதல்வராக அரிதாரம் பூசாமல் அவதாரம் எடுத்திருக்கிறீர்கள். பெருமைக்குரிய இந்த இடத்தை பிடிப்பதற்கு நீங்கள் பட்ட துயரங்கள் எத்தனை, தாங்கிய இடர்கள் எத்தனை. முட்கள் நிறைந்த பாதையில் ரத்தம் சொட்ட சொட்ட நடந்து எங்களுக்கு பூக்களை பறித்துக் கொடுத்தீர்கள். கொடிய ஜந்துக்கள் நிறைந்த ஆற்றை நீந்தி நீந்தி கடந்து எங்களுக்கு கனிகளை பறித்துக் கொடுத்தீர்கள். உங்கள் வலிகளை எல்லாம் இதயத்துக்குள் ஒளித்து வைத்து புன்முறுவலால் எங்களை வாரி அணைத்துக் கொண்டீர்கள்.
மலைபோல் வந்த சோதனைகளையும் வேதனைகளையும் பனி போல் ஆக்கிடும் வித்தை அறிந்தவர் நீங்கள். கடலில் எழுந்த சுனாமி மக்களை வதைத்தது எனில் உங்களால் எழுந்த மக்கள் சுனாமி தமிழகத்தை காத்து நல்ல ஆட்சியை உங்களிடம் கொடுத்தது. மலைமுகடுகளிலும் அகடுகளிலும் பூமியிலும் சமவெளிகளிலும் கடல் அலைகளிலும் புல்வெளிகளிலும் எங்கும் ஒலிப்பது விஜய் என்னும் விசில் சத்தம். மக்கள் மனங்களில் இடம் கொடுத்தார்கள் இது சத்தியம்.
கட்டுக்குள் அடங்காத காற்றாற்று வெள்ளத்தை எவரால் தடுக்க முடியும் மக்கள் வெள்ளத்தின் துணை உண்டு நீங்கள் வகுக்கும் உங்கள் பாதையில் பூக்கள் மலரட்டும். தமிழகத்தின் தலை நிமிரட்டும். ஆறு நாட்கள் அனலில் விழுந்த புழுவாய் தவித்தது போதும் .ஆளுநர் உங்களை முதலமைச்சர் என்று அறிவித்த போதும் உங்கள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ஆனால் உங்கள் கண்களில் மட்டும் தமிழகத்தை காக்க வேண்டும் என்ற ஒளி வீசியதை நான் கண்டேன். மனதை பாறையாக இறுக்கி முகத்தில் அமைதியை தவழ விட்டிருந்தீர்கள். உங்களை வசை பாடிய போதும் கேலி செய்து சிரித்த போதும் எட்டி உதைக்க நினைத்தபோதும் நீங்கள் காட்டிய பொறுமை பூமாதேவியை போன்றது.
இந்த நிலம் தன்னை வெட்டி பிளந்தவர்களுக்கு வாரி வாரி தங்கத்தை கொடுக்கிறது. வரி வரியாய் கிழித்தவர்களுக்கு வயிற்றுக்கு உணவு கொடுக்கிறது. அதுபோல உங்களை சொல் அம்புகளால் துளைத்தவர்களுக்கும் மனதை காயப்படுத்தியவர்களுக்கும் கூட உங்கள் உள்ளத்தில் இடம் கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் உள்ளத்தை பார்த்து மனப்பூர்வமாக சொல்கிறேன் நீங்கள் தாயுமானவன். உங்கள் வருகைக்காக பொன் உலகம் காத்திருந்த போதும் அதை எல்லாம் வேண்டாம் என தூக்கி எறிந்து விட்டு எங்களுக்காக முள் கிரீடம் ஏந்தி சிலுவையை சுமக்க முன் வந்தீர்கள்.
பன்னீர் நதியில் குளிக்கவில்லை. தீக்குழியில் இறங்கி வந்தீர்கள். சாதி மத பேதமில்லா சமத்துவ தலைவனாய் வென்றீர்கள். உங்கள் பொறுமையில் கர்மவீரர் காமராஜரை காண்கிறோம். உங்கள் உறுதியிலும் மக்கள் பாசத்திலும் புரட்சி தலைவர் எம் ஜி ஆரை காண்கிறோம். தமிழகத்தில் ஜோசப் விஜய் எனும் தலைவன் நல்லாட்சி தொடரட்டும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாளை நமதே இந்த நாடும் நமதே
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.























