பிரபல நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் கதையின் நாயகனாக நடித்து இருக்கிறார். இதில் ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, பால சரவணன், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன், சாயா தேவி உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். பிரசாந்த் பாண்டியராஜ் டைரக்டு செய்துள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே.குமார் தயாரித்துள்ளார். ஶ்ரீகுமரன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல விநியோகஸ்தர் சிதம்பரம் வழங்குகிறார். இசை: ஹேஷாம் அப்துல வஹாப், ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன்.
‘மாமன்’ படம் உல்கம் முழுவதும் வருகிற 16-ந்தேதி வெளியாக இருக்கிறது. ‘மாமன்’படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் படக்குழுவினருடன் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், மாரி செல்வராஜ், சிறுத்தை சிவா, பாண்டிராஜ், பொன் ராம், ரவிக்குமார், தயாரிப்பாளர்கள் பைவ் ஸ்டார் கதிரேசன், டி. சிவா, அருண் விஷ்வா, கே. கலையரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் சூரி பேசும்போது, ‘’பதினாறு வருடமாக என்னுடன் பயணித்துக் கொண்டிருக்கும் குமார் இன்று தயாரிப்பாளராக உயர்ந்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். கருடன் படம் போல் இந்த திரைப்படமும் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என நம்புகிறேன்.
ராஜ் கிரண் அப்பா இந்தப் படத்திற்காக நடிக்க ஒப்புக் கொண்டது எங்களுக்கெல்லாம் பெருமை.
இப்படத்தின் கதையை நான் எழுதி இருந்தாலும் எனது பெயர் வரவேண்டாம் என இயக்குநரிடம் சொல்லி இருந்தேன். ஆனாலும் இப்படத்தின் கதை என எனது பெயர் இடம் பிடித்திருக்கிறது. நான் இங்கு நிற்கிறேன் என்றால் அதற்கு என்னுடைய குடும்பம் தான் காரணம்.
இந்தப் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது ‘சாமிக்கு அடுத்து பொண்டாட்டி இல்லடா.. பொண்டாட்டி தான் சாமி‘. இது என்னை மிகவும் நெகிழ வைத்தது. அதேபோல் எனக்கு சாமிக்கு அடுத்து குடும்பம் இல்லை குடும்பம் தான் சாமி என்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். இன்று எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தது குடும்பம் தான். இந்தப் படத்தின் கதை உருவானதும் இங்கிருந்து தான். நான் இந்த படத்திற்காக கதையை யோசித்து எழுதவில்லை. எங்கள் குடும்ப உறவுகளில் நடைபெற்ற சம்பவங்களை தான் சொல்லி இருக்கிறேன்.
இந்த கதையை கேட்டதும் பிரசாந்த் பாண்டிராஜ், ‘அண்ணே இந்த கதை என்னுடைய குடும்பத்திலும் நடந்திருக்கிறது‘ என்றார். இந்த படம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையானதாக இருக்கிறது என சொல்லி இயக்கத் தொடங்கினார்.
உங்கள் குடும்பத்தை மே 16ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு சென்று பார்க்க போகிறீர்கள். பல குடும்பங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்கும் அல்லது எதிர்காலத்தில் நடக்கும்’’என்றார்.





















