ஜஸ்டின் பிரபு இயக்கத்தில் நாயகனாக ஹரி கிருஷ்ணன், நாயகியாக ஷீலா நடித்துள்ள ‘வேம்பு’ படம் சமீபத்தில் திரைக்கு வந்து பெண்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு படம் என்ற பாராட்டுகளை பெற்றுள்ளது.
இந்த படத்துக்கு குமரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்துக்கு ஒளிப்பதிவு பெரிய பலமாக அமைந்து இருப்பதாக குமரனுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.
சினிமா பயணம் குறித்து ஒளிப்பதிவாளர் குமரன் கூறியதாவது:-
‘’நான் கல்லூரியில் பி.டெக் படித்துக் கொண்டிருந்தபோதே சினிமாவில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன். ‘மருதமலை’ பட ஒளிப்பதிவாளர் வைத்தியிடம் உதவியாளராகச் சேர்ந்து மலையாளம், கன்னட மொழி படங்களில் பணியாற்றினேன்.
பின்னர் ஒளிபதிவாளர் வேல்ராஜ் இயக்குநராக மாறிய வேலையில்லா பட்டதாரி படத்தில் ஆப்பரேட்டிவ் கேமராமேனாக பணியாற்றி மேலும் அவர் இயக்கிய தங்க மகன் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானேன். தொடர்ந்து எங்கம்மா ராணி படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளேன்.
‘பாதாம் கீர்’ என்கிற படத்தில் பணியாற்றியபோது அந்த படத்தில் உதவி இயக்குநராக ஜஸ்டின் பிரபு வேலை பார்த்தார். அப்போது ஏற்பட்ட நட்பில் அவர் இயக்குநராக அறிமுகமான வேம்பு படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்தேன்.
இந்த படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் சினிமாக்காரர்கள் செல்லாத அழகான பகுதிகளில் நடந்தது. அங்கு ஒரு மழை காட்சியை எடுக்க முடிவு செய்தோம். ஆனால் வாகன போக்குவரத்துக்கு இடைஞ்சலான பகுதியாக அது இருந்ததால் செயற்கை மழைய உருவாக்க தண்ணீர் வண்டியை அங்கு கொண்டு வர முடியவில்லை. அப்போது எதிர்பாராத விதமாக மழை பெய்ததால் இயற்கை மழையிலேயே அந்த காட்சியை படமாக்கிய அனுபவம் மறக்க முடியாதது.
‘வேம்பு’ படம் பார்த்த பலரும் என்னை பாராட்டுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு சிலர் பாலுமகேந்திராவின் ஃபிரேம்களை பார்த்தது போல இருக்கிறது என்றனர். அத. பெருமையாக இருந்தாலும் அப்படி ஒரு ஜாம்பவானுடன் ஒப்பிடுகிறார்களே என பயமாகவும் இருந்தது.
தற்போது சிங்கிள் ஷாட்டில் கின்னஸ் சாதனைக்காக உருவாகியுள்ள ‘ப்ளீஸ் ஓப்பன் தி டோர்’ என்கிற படத்தில் பணியாற்றியுள்ளேன். இது ரிலீக்கு தயாராகிறது. சிங்கிள் ஷாட்டில் எடுக்க பெங்களூரில் இருந்து சில சாதனங்களை வரவழைத்து எந்த ஒரு இடத்திலும் காட்சி படமாவது தடைபடாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டத மிகப்பெரிய சவாலாக இருந்தது.
உலகத்திலேயே சிங்கிள் ஷாட்டில் அதிக நீளம் கொண்ட படம் இந்த ‘ப்ளீஸ் ஓபன் தி டோர்’ படம் தான். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக அனுப்பப்பட உள்ளது.
அடுத்ததாக காளி வெங்கட் நடிக்கும் படத்தில் பணியாற்றி வருகிறேன். ரகுராம் இந்தப் படத்தை இயக்குகிறார். இன்னொரு படமாக காளி வெங்கட் மற்றும் தம்பி ராமையா இணைந்து நடிக்கும் படத்திலும் பணியாற்றி வருகிறேன். சமீபத்தில் இந்த படத்திற்காக ஒரு நீதிமன்றக் காட்சியை இரண்டு கேமராக்களை பயன்படுத்தி ஒரு புதிய யுக்தியில் படமாக்கினேன். படக்குழுவினர் அனைவருமே அதை பாராட்டினார்கள்.
குறிப்பாக தம்பி ராமையா என்னிடம் வந்து, “ஒரு இயக்குநராக சொல்கிறேன்.. இதுவரை நான் பார்த்த படங்களில் இது போன்று ஒரு காட்சியை யாரும் படமாக்கியது இல்லை குமரா” என்று பாராட்டியதுடன், பார்க்கும் அனைவரிடமும் இந்த காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி சிலாகித்துக் கூறி வருகிறார். அது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.
நான் பணியாற்றிய பாதாம்கீர் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. சமீர் அலிகான் தயாரித்து இயக்கி நடித்துள்ள ‘தமிழ் பையன் ஹிந்தி பொண்ணு‘ படத்தில் பணியாற்றியுள்ளேன். 90-களில் வெளியான பாலிவுட் படங்களின் விஷுவல் போல ரம்யமாக இருக்கும்.
அடுத்ததாக இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் நாதமுனி படத்தில் பணியாற்றியுள்ளேன். குழந்தைகளின் மீதான பாலியல் துன்புறுத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ளது. மாதவன் என்பவர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யா தாத்தா கதாநாயகியாக நடித்துள்ளார்”.
இவ்வாறு அவர் கூறினார்.
























