பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி மாடலிங் துறையில் நுழைந்து நடிகையாக மாறி இருக்கிறார்.
விளையாட்டு, மாடலிங், ரியாலிட்டி ஷோ, மற்றும் நடிகையான வாழ்க்கை பயண அனுபவங்கள் குறித்து குயின்சி கூறியதாவது:-
‘’நான் ஆரம்ப காலத்தில் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக பயணத்தைத் தொடங்கினேன். பின்னர் மாடலிங் துறையில அடியெடுத்து வைத்தேன். அது என்னை நடிப்புத் துறைக்கு கொண்டு சென்றது. இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ அமைந்தது.
சீரியல்களில் பணிபுரிவது எனக்கு ஒழுக்கத்தையும் கேமரா அனுபவத்தையும் கொடுத்தது. ஆனால் திரைப்படங்களில் நடிப்பது வித்தியாசமான அதே சமயம் அதிக திருப்தி தரக்கூடிய ஒன்று. அதன் கதை சொல்லக் கூடிய முறையும் வேறு விதமாக இருக்கும். ஓம் காளி ஜெய் காளி’ வெப் தொடர் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. கலாச்சாரத்தைப் பற்றி கற்றுக்கொள்வதில் இருந்து உடல் ரீதியான மாற்றங்களைச் சந்திப்பது வரை என ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் பணிபுரியும் அனுபவத்தை அந்த வெப்சீரிஸ் கொடுத்தது. அர்ப்பணிப்பு என்றால் என்ன என்பதை இந்த வெப்சீரிஸ் எனக்குக் கற்றுக் கொடுத்தது.
அடுத்து திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறேன். கமர்ஷியலான அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்த படத்தில் நடிக்க விரும்புகிறேன. எனக்கு பிடித்த நடிகர்கள் சூர்யா மற்றும் ஃபஹத் ஃபாசில். அவர்களைப் போன்ற திறமையான நடிப்பை வெளிப்படுத்த விரும்புகிறேன்.
மேலும் இயக்குநர்கள் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி போன்றோருடன் பணிபுரியும் வாய்ப்பை எதிர்நோக்கி இருக்கிறேன. தங்கள் படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு இந்த இயக்குநர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும் கதாபாத்திர வலிமையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகள் தெரியும். கதை சரியாக இருக்கும்போது மொழி ஒருபோதும் தடையாக இருக்காது. புது மொழிகளை கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன். எனக்கு நடனம் பிடிக்கும். அதில் இன்னும் பல புது முறைகளைக் கற்றுக் கொள்ளப் போகிறேன். கிளாமர் மற்றும் போல்டான கதாபாத்திரத்தில் கதைக்குத் தேவைப்பட்டால் நடிக்கத் தயாராக இருக்கிறேன்”
இவ்வாறு அவர் கூறினார்.
























