தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் மோகன். இவரது நடிப்பில் முதலில் வெளியான மூடுபனி தொடர்ந்து திரைக்கு வந்த நெஞ்சத்தை கிள்ளாதே ஆகிய இரண்டு படங்களுமே வெற்றி பெற்றதால் பட வாய்ப்புகள் குவிந்தன.
கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை. இதயகோயில், மெளனராகம், ரெட்டை வால் குருவி, மெல்ல திறந்தது கதவு, குங்கும சிமிழ், உயிரே உனக்காக உள்பட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் வெள்ளி விழா கதாநாயகனாக கொண்டாடப்பட்டார்.
அதன் பிறகு பல வருடங்களாக நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்த அவர் கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியான ‘ஹாரா’ படத்தில் மீண்டும் நாயகனாக நடித்து இருந்தார். தொடர்ந்து விஜய்யின் தி கோட் படத்தில் வில்லனாக வந்தார்.
இந்த நிலையில் நடிகர் மோகன் பிறந்த நாள் விழாவை சென்னை பரணிபுதூர் ரொஹாபாத் பெண்கள் மன நலம் பாதுகாப்பு இல்லத்தில் அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். இதில் மோகன் கலந்து கொண்டு கேக் வெட்டினார். உதவிகள் மற்றும் பிரியாணியும் வழங்கினார்.
ஐயப்பன் தாங்கல் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு பிரியாணி, மோர் போன்றவற்றையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சேலம் ஆர் ஆர் பிரியாணி உரிமையாளர் ஆர். தமிழ்ச்செல்வன், கவிஞர் முத்துலிங்கம் மற்றும் நடிகர் மோகன் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.




















